அமைதியாக நடந்தது தினேஸின் இறுதி நிகழ்வுகள்! நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பங்கெடுக்க தடை

இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய கரவெட்டி துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று இடம்பெற்றுள்ள நிலையினில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களிற்கு ஊர்பொதுமக்களால் நிகழ்வினில் பங்கெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக நேற்று மாலை அங்கு வருகை தந்திருந்த உயிரிழந்த இளைஞனின் கிராமத்தை சேர்ந்த தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினரான சிவயோகன் இளைஞர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார்.எனினும் அங்கு அஞ்சலி செலுத்த சென்ற மற்றொரு மாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கத்துடன் உரையாடிய இளைஞர்கள் தமது குறித்த தடைபற்றி அறியத்தந்ததுடன் அவரை உயிரிழந்த இளைஞனின் வீட்டிற்கு செல்ல அனுமதித்துமிருந்தனர்.
இன்றைய தினம் கே.சிவாஜிலிங்கமும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி செயலாளா செல்வராசா கஜேந்திரனும் மட்டும் இறுதி அஞ்சலி நிகழ்வினில் பங்கெடுக்க மக்கள் அனுமதித்திருந்தனர்.அவர்களும் இறுதி ஊர்வலத்தினில் பங்கெடுத்திருந்தனர்.


இதனிடையே நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதும் இறுதிக்கிரியை நேரம் மற்றும் இறுதி ஊர்வலத்தின் போது அங்கு அமைதி நீடித்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதனிடையே துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்தமையை நியாயப்படுத்தி தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டதாக பரவிய தகவலை தொடர்ந்தே, எந்தவோர் அரசியல்வாதிகளும் தமது பகுதிக்குள் வரக்கூடாதென ஊர் பொதுமக்கள் அறிவிப்புவிடுத்திருந்தனர்.
எனினும் குடத்தனைப் பகுதியில் நேற்றைய தினம் மாலையில் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஓர் இளைஞன் உயிரிழந்த சம்பவத்தினை வன்மையாக கண்டித்துள்ளதாக தமிழரசுக்கட்சி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் மணல் கடத்தல் இடம்பெறுவதாக முறையிடப்பட்டபோதும் கடத்தலை தடுக்க வேண்டியதே காவல்துறையினரின் கடமை அதற்காக சட்டத்தினை கையில் எடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு கிடையாது.
இதேநேரம் மணல் கடத்தலில் குறித்த இளைஞன் ஈடுபட்டிருந்தால் சட்டப்படி சட்ட வரையறைகளிற்குள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே அன்றி இளைஞனின் உயிரைக்குடிக்கும் அளவிற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய தேவை கிடையாதெனவும் அவர் சொன்னதாக அச்செய்தியினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Theme images by mammuth. Powered by Blogger.