துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார் : அனலைதீவை சேர்ந்தவர்கள் கைது.
யாழ்.நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் பின் வீதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று இருந்தது. அதில் யாழ்.மேல் நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததுடன் , மற்றுமொரு மெய் பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்.
குறித்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடாத்திய துப்பாக்கிதாரியை நாம் அடையாளம் கண்டு உள்ளோம் , துப்பாக்கிதாரி புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தை சேர்ந்தவர். அவர் மீது கொலை வழக்கு ஒன்று நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனலைதீவை சேர்ந்தவர்கள் கைது.
அதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் அனலைதீவை சேர்ந்த இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீதிபதியின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்தே சுட்டார். நீதிபதியின் வாகனத்திற்கு முன்னே வீதி ஒழுங்கு நடவடிக்கைளை முன்னெடுத்து நீதிபதியின் மெய் பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அதன் போது யாழ் – பருத்தித்துறை வீதியும், கோவில் வீதியும் சந்திக்கும் சந்தியில் வீதியில் இறங்கி வீதி ஒழுங்குகளை மேற்கொண்டு உள்ளார்.
அதன் போது மதுபோதையில் அங்கிருந்த நபர் ஒருவருக்கும் , குறித்த பொலிஸ் உத்தியோகச்தருக்கும் இடையில் முரண்பாடு தோன்றி அவர்கள் இருவரும் முரண்பட்ட வேளையில் திடீரென பொலிஸ் உத்தியோகஸ்தரின் இடுப்பு பட்டியில் இருந்த கைத்துப்பாக்கியை மதுபோதையில் நின்ற நபர் எடுத்துள்ளார்.
அதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் , மதுபோதையில் நின்ற நபரிடம் இருந்து கைத்துப்பாக்கியை மீள பறிக்க முயன்ற போதே அந்நபர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்.
அதில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்தார். அதனை தொடர்ந்து அந்நபர் வீதியில் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். இவ்வாறாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments