இளஞ்செழியனின் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் கைது!
நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் கைது!
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலர் ஒருவரின் உயிரைப் பறித்து மற்றொருவருக்கு காயத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 8 வருடங்களாக இணைந்து செயற்பட்டு ஆயுத பயிற்சி பெற்றவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் பொலிஸாரால் தற்போது தேடப்பட்டு வரும் பிரதான சந்தேக நபர் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற படு கொலை ஒன்றின் சந்தேக நபர் எனவும், அது தொடர்பில் அவர் பிணையில் இருந்து வருவதும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் சிறப்புக் குழுவொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சந்தேக நபரை கைது செய்வதற்கு வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகியோரின் மேற்பார்வையில் மூன்று சிறப்புக் குழுக்கள் விசாரணைகளை தொடர்கின்றன.
இந் நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் தொடர்பில் இந்த மூன்று பொலிஸ் குழுக்களும் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில், சந்தேக நபர் தொடர்பில் பல தகவல்கள் பொலிஸாரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர் 1996 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துள்ளதுடன் அங்கு ஆயுதப் பயிற்சியைப் பெற்று 2004 ஆம் ஆண்டு வரை அந்த இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளார். பின்னர் அந்த இயகத்தில் இருந்து விலகியுள்ள அவர் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும், சந்தேக நபருக்கு 6 பிள்ளைகள் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முதல் மனைவி மூலாமாக நான்கு பிள்ளைகளும் இரண்டாம் மனைவி ஊடாக இரு பிள்ளைகளும் சந்தேக நபருக்கு உள்ளதாகவும் சந்தேக நபர் தொழில் ரீதியில் பஸ் சாரதியாக செயற்பட்டுள்ளமையும் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளன.
இந் நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் சகோதரர், உறவுக்காரர்களான 42 வயதான பாலசிங்கம் மகேந்திர ராசா, 49 வயதுடைய செல்வராசா மகேந்திரன் ஆகியோரிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் ஏனைய விசாரணைகளுக்கு அமைய மேற்படி தகவல்களை சேகரித்துள்ளனர்.
48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்ப்ட்ட விசாரணைகளில் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்ப்ட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந் நிலையிலேயே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments