இங்கிலாந்தில்....கருவுற்றிருந்த ஆணுக்கு குழந்தை பிறந்தது
லண்டன், ஜூலை.10-
இங்கிலாந்தில் கருவுற்றிருந்த ஆண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்
இங்கிலாந்தின் கிளவ்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் ஹைடன் கிராஸ் (வயது 21). பெண்ணாக பிறந்து பெய்ஜ் என்ற பெயருடன் வளர்ந்து கொண்டிருந்த இவரின் உடலில் நாளடைவில் மாற்றங்கள் ஏற்பட்டன. குரல் தடித்து, ஆணுக்குரிய ஹார்மோன்கள் அதிகமாக சுரக்க ஆரம்பித்தன. எனவே இவர் முழுமையாக ஆணாக மாறுவதற்குரிய ஹார்மோன் சிகிச்சைகளை மேற்கொண்டார்.
இந்த பாலின மாறுதல் சிகிச்சையின் போதே, பிற்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தனது கருமுட்டையை சேமிக்குமாறு, தான் சிகிச்சை பெற்ற தேசிய சுகாதார மையத்தை கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு சுகாதார மையம் மறுத்ததை தொடர்ந்து அந்த சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
எனினும் ஹார்மோன் சிகிச்சை பாதிக்கு மேல் கடந்துவிட்டதால், அவர் சட்டப்பூர்வமாக ஆண் எனவே அறியப்பட்டார். எனவே தனது பெயரை ஹைடன் கிராஸ் எனவும் மாற்றிக்கொண்டார்.
குழந்தை பெற்றார்
இந்த நிலையில் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஹைடன் விரும்பினார். இதற்காக உயிரணு தானம் பெறுவதற்கான வழிமுறைகளை தேடினார். அப்போது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் மூலம் உயிரணு கொடையாளர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. எனவே அவர் மூலம் உயிரணு தானம் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் அவர் கருவுற்றார்.
இங்கிலாந்தில் ஆண் ஒருவர் கருவுற்ற செய்தி உலகம் முழுவதும் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த பரபரப்பை ஏற்படுத்திய ஹைடன், கடந்த மாதம் 16-ந் தேதி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்து மருத்துவ உலகத்தை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
முதல் முறை
தனது குழந்தைக்கு டிரினிட்டி-லெய் என பெயரிட்டு கொஞ்சி மகிழந்து வரும் ஹைடன், அவள் தன்னுடைய ஏஞ்சல் என வர்ணித்து உள்ளார். இனி தனது பாலின மாற்று சிகிச்சையை விரைந்து முடிக்க உள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தோமஸ் பீட்டி என்ற ஆண் ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு குழந்தை பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்தில் ஆண் ஒருவர் குழந்தை பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
