தீப்பற்றி எரிந்தது நூற்றுக்கணக்கான பனைகள் நாசம் - பொன்னாலை
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு நேரே பின்புறமாக, பெரியவர் ஆலயத்திற்கு சமீபமாக உள்ள பற்றைக் காட்டுக்கு நேற்று (23.07.2017) சில விஷமிகள் தீமூட்டியதால் அது எரிந்து நாசமானது.
இந்த தீயினால் நூற்றுக்கணக்கான பனை மரங்களும் எரிந்து எரிந்துபோயின.
நேற்று பகல் 1.00 மணியளவில் மேற்படி காடு தீப்பற்றி எரியத் தொடங்கியது.
காட்டின் பெரும்பகுதி எரிந்து அழிந்த நிலையில் அது தொடர்பாக கேள்வியுற்று அங்கு சென்ற பொன்னாலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் அது தொடர்பாக வலி.மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் உள்ளுர் உத்தியோகத்தர்களுக்கும் தகவல் கொடுத்தார்.
அதையடுத்து அங்கு சென்ற பொன்னாலை சமுர்த்தி உத்தியோகத்தர் ச.சுகந்தன் மேற்கொண்ட முயற்சியால் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து தீ அணைக்கப்பட்டது.
இதனிடையே வலி.மேற்கு பிரதேச சபைச் செயலாளரும் உத்தியோகத்தரும் நீர்ப் பவுஸர் சகிதம் அந்த இடத்திற்கு விரைந்து நிலமைகளைக் கண்காணித்தனர்.
இதேவேளை, காடு எரிந்தபோது அதன் அருகே உவர் நீர்த் தடுப்பணை அமைக்கும் பணியில் அதன் ஒப்பந்தகாரர் மற்றும் பணியாளர்களும் நின்ற போதிலும் அவர்கள் அதை அணைப்பதற்கு எந்தவித முயற்சியும் எடுத்திருக்கவில்லை.
காடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தபோதிலும் அவர்கள் அது தொடர்பாக எந்தவித கரிசனையும் இன்றி தமது பணியை மேற்கொண்டமை தொடர்பாக விசனம் வெளியிடப்பட்டது.

No comments