நோர்வேயுடன் யாழ். பல்கலைக்கழகம் உடன்படிக்கை
மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகத்துடன் தூயசக்தி தொழில்நுட்ப உதவி சம்பந்தமான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
உடன்படிக்கையின் அடிப்படையில், தூயசக்தி தொழில்நுட்பம் சம்பந்ததாக மாணவர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் அறிவை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுமே இதன் நோக்கம்
நோர்வே மற்றும் ஸ்ரீலங்காவின் தனியார் நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் கொண்ட ஒரு ஆய்வுக் குழுவை உருவாக்கும் நோக்கில் நோர்வே தூதுவாராலயத்தினால் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படவுள்ள உதவியின் உத்தேச மதிப்பீடு 112 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்படப்பட்டுள்ளது.
இந்த தூயசக்தி தொழில்நுட்ப உதவி சம்பந்தமான உடன்படிக்கையானது, ஸ்ரீலங்காவின் தூயசக்தி பற்றிய நிலைத்து நிற்கக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதற்கான புதிய திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் கொண்டுவருமென நோர்வே தூதுவர் கௌஸ்டாட்சாதர் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகையின் ஒரு பகுதி யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறை ஆய்வுகூடங்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் துறையினர் இணைந்த ஒரு ஆய்வுக்குழுவை உருவாக்குவது இந்த செயற்திட்டத்தின் ஒரு முக்கிய கூறு எனவும் அவர் கூறியுள்ளார்.
தூயசக்தி தொழில்துட்பமானது நோர்வேயில் மிகவும் முன்னுரிமை கொடுக்கப்பட்ட நிலையில், இத்தொழில்நுட்பத்தில் மேலதிக கவனம் செலுத்தப்பட்டு, பல்கலைக்கழகங்களுக்கும் தனியார்துறைக்குமிடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களுக்கும், முதலீடுகளுக்கும் வாய்ப்பு ஏற்படுமென நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
மாணவர்கள், ஆளணியினர் மத்தியிலான இணைஆய்வு, அறிவு மேம்பாடு பற்றிய நடவடிக்கைகளுக்கு உறுதி சேர்க்கும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
2017 தொடக்கம் 2021 வரை நடைமுறையிலிருக்கும், இந்தத்திட்டத்திற்கு 85 மில்லியன் ரூபாய்கள் உதவியை நூர்பார்ட் திட்டம் ஏற்கனவே வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில், மேலும் நோர்வேயைச் சேர்ந்த பேர்கன் பல்கலைக்கழகம், அக்டர் பல்கலைக்கழகம், இலங்கை பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கோயம்பத்தூர் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம் என்பன இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
