நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் கொலைக்கு காரணமான துப்பாக்கிதாரியின் வாக்குமூலம் - "சுடச்சொன்னார் சுட்டேன்"
நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார்.
நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது. இவ்வாறு இன்று காலை சரணடைந்த பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று பொலிஸாரிடம் சரணடைந்திருந்தார்.
பொலிஸாரினால் தீவிரமான தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை பிரதான சந்தேகநபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
39 வயதான சிவராசா ஜயந்தன் என்ற பிரதான சந்தேகநபரே இவ்வாறு சரணடைந்துள்ளார்.
யாழ். நல்லூர் இவருடைய சொந்த இடம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர் 1994ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார். அதன் பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகியிருந்தார்.
2012ஆம் ஆண்டு யாழ். கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவராசா ஜயந்தன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவ்வாறு பிணையிலுள்ள நிலையிலேயே அவர் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த நபருக்கு முதலாவது திருமணம் மண்கும்பான் என்ற இடத்திலும், இரண்டாவது திருமணம் புங்குடுதீவிலும் நடைபெற்றுள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments