அதிர்ச்சி அளிக்கும் ‘வருங்கால உணவு’! - அதிர்ச்சி அளிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.


நாம் சாப்பிடும் உணவில் ஒரு சிறு பூச்சி இருந்தாலும் அதை அருவருப்போடு ஒதுக்கிவிடுவோம். ஆனால் வருங்காலத்தில் மனிதர்கள் பூச்சிகளைத்தான் சாப்பிட வேண்டியிருக்கும் என்று கூறி அதிர்ச்சி அளிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பூச்சிகள் மூலம் உணவு தயாரிப்பது குறித்து தற்போது போலந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக உணவுப் பொருட்களில் சிறிய பூச்சிகள் இருந்தாலே அது தரமற்ற பொருளாகக் கருதப்பட்டுவிடும்.
ஆனால் சீனா போன்ற நாடுகளில் உள்ள கடைகளில் வறுத்த பூச்சிகள் உணவாகப் பரிமாறப்படுகின்றன. அந்நாட்டு மக்கள் பூச்சிகளை ரசித்து ருசிக்கின்றனர்.
இந்நிலையில், வருங்கால உணவுப்பொருட்கள் குறித்த ஆராய்ச்சியில் உண்ணத் தகுந்த பூச்சிகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது. பூச்சிகளில் என்னென்ன ஊட்டசத்துகள் உள்ளன என்று ஆராயப்பட்டு வருகிறது.
அந்த ஆய்வில், லார்வாக்கள் மற்றும் எறும்புகளில் ஒருவித மசாலா சுவையும், புளிப்புச் சுவையும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கிடுகிடுவென்று அதிகரித்துவரும் உலக மக்கள் தொகையை வைத்துக் கணக்கிட்டால், 2050-ம் ஆண்டில் அனைவருக்கும் உணவளிக்க உணவு உற்பத்தி 70 சதவீதம் அளவுக்கு உயர வேண்டும். ஆனால் விவசாய நிலப்பரப்பும், நீர்ப்பாசன வசதியும் சுருங்கிக்கொண்டே வருகின்றன.
எனவேதான், வருங்காலத்தில் பூச்சிகளை உணவாக உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என ரொக்லோ பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
என்ன செய்ய, மெல்ல மெல்ல புழு, பூச்சிகளை சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டியதுதான்!
Theme images by mammuth. Powered by Blogger.