யாழில் தொடரும் பதற்றம்! தேடித்தேடி வேடையாடப்படும் சூழ்நிலை!! 43 பேர்வரை கைது
யாழ்ப்பாணக் குடா நாடு கடந்த சில நாட்களாக பதற்றம் நிறைந்த ஒன்றாகவே சென்றுகொண்டிருக்கிறது.
கடந்த போர்க்காலத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆங்காங்கே அதிரடிப்படையினர் உந்துருளிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
போர்க்காலத்தில் இவ்வாறான உந்துருளிகளில் பிரசன்னமாகும் படையினரை “பீல்ட் பைக் குரூப்” என்று அழைப்பதுண்டு. மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அதிரடியாக பிரசன்னமாகும்போது வீதியில் நிற்பவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள்.
சிலர் தாக்குதலுக்கும் உள்ளாவார்கள். இதனால் அன்றைய காலம் மிகுந்த பதற்றம் மிக்கதாகவே கடந்துகொண்டிருக்கும்.
யாழ்ப்பாணத்தில் சில நாட்களாக நடந்துவரும் பதற்றம் மிக்க சூழ்நிலையில் இதுவரை துன்னாலையிலும் கோண்டாவிலிலும் அல்வாயிலும் நாற்பத்து மூன்று பேர்வரை பொலிஸாரினாலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யபட்டுள்ளனர்.
துன்னாலைப் பகுதியில் நூற்றுக்கணக்கான விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைது செய்யப்படுபவர்கள் கடந்த மாதம் பொலிஸ் காவலரண் மீதும் பொலிஸார் மீதும் தாக்குதல் நடதினார்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்களாகவே உள்ளனர். மேலும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
தவிர ஏனைய பிரதேசங்களில் அடையாள அட்டை இல்லாமல் பயணிப்பவர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறாக நாளுக்கு நாள் விசேட அதிரடிப்படையினரதும் பொலிஸாரினதும் இந்தக் கைது நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருப்பதால் மக்கள் வீதிகளில் இறங்குவற்கே அச்சப்படுவதாக எமது யாழ் மாவட்ட பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.


No comments