மாகாணசபை தேர்தல் விவகாரம் நாளை அமைச்சரவையில்
ஐக்கிய தேசியக் கட்சியானது சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலத்தினை நீடித்து அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதெனவும் அதற்காக தற்போதுள்ள அரசியலமைப்பில் 20ஆவது திருத்தமொன்றினை முன்வைப்பதெனவும் தீர்மானித்துள்ளது.
எனினும் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் நிறைவுக்கு வருகின்ற நிலையில் அவற்றுக்கான தேர்தலை பிற்போடாது உடனடியாக நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானத்தினை ஆதரிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்மானத்தினை வரவேற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டினை எட்டியுள்ள கலப்பு முறையில் நடத்தி அதில் காணப்படும் நிறைகுறைகளை ஆராய்ந்த பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும்.
அதற்கு முன்னதாக இம்மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை பிற்போடுவதற்காக அரசியலமைப்பை திருத்தாது தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார முறைமையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இத்தகைய நிலைப்பாட்டினையே வெளிப்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக தெரியவரும் நிலையில் நாளைய தினம் அமைச்சரவையில் இவ்விடயம் குறித்து அதிகளவில் அவதானம் செலுத்தப்படும் என தெரியவருகின்றது.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளிடையில் இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதன் காரணமாக நாளையதினம் அமைச்சரவைக் கூட்டத்தொடரில் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

No comments