வடகொரியா மிரட்டலால் அமெரிக்கா, ஜப்பானில் பதற்றம்!
அமெரிக்காவின் குவாம் பகுதி மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா மிரட்டியதைத் தொடர்ந்து, தென்கொரியா, ஜப்பான் நாடுகளில் பதற்றம் தொற்றியுள்ளது. குவாம் பகுதியை பாதுகாக்க அமெரிக்கா முழுவீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
வடகொரியா மீது குண்டுமழை பொழிவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்ததற்கு பதிலடியாக அமெரிக்காவின் குவாம் பகுதியை தாக்குவோம் என்று மிரட்டியது.
இதையடுத்து, குவாம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறது. அதேசமயம், ஜப்பான் மீது ஏவுகணைகள் பறக்கும் என்று வடகொரியா கூறியிருப்பதால் ஜப்பானும் தனது ராணுவத்தை உஷார்படுத்தியுள்ளது. தென்கொரியா தனது எல்லைப் பகுதியில் ராணுவத்தை பலப்படுத்தி இருக்கிறது.
வடகொரியாவை தாக்கப்போவதாக கடந்த சில மாதங்களாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார். ஆனாலும், அவருடைய அச்சுறுத்தலை மீறி அணுஆயுத சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments