படைகளைப் பின்வாங்க சீனா சம்மதம்!
பூடானில், டோக்லாவில் நிலைகொண்டுள்ள சீனத் துருப்புகள், 100 மீட்டர் தொலைவுக்குப் பின்வாங்கிச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 250 மீட்டர் தொலைவுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டுமென இந்தியத் துருப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா-சீனா எல்லையில் பூடானுக்குச் சொந்தமான டோக்லா பகுதியை சீனா உரிமைகொண்டாடி, அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்தியத் துருப்புகள் அதைத் தடுத்து, அங்கு முகாமிட்டுள்ளன. இந்தியப் படைகள் பின்வாங்க வேண்டுமென சீனா தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், இந்தியப் படைகள் அசைய மறுத்துவிட்டன.
தொடர்ந்து, சீன மீடியாக்கள் 'நாங்கள் அப்படி பலம் பெற்றவர்கள் இப்படி பலம் பெற்றவர்கள்' எனச் செய்திகள் வெளியிட்டுவந்தன. போர் தொடங்கப்போகிறது என மிரட்டியும் பார்த்தது. சீன மீடியாக்களின் கொக்கரிப்புகளை இந்திய ராணுவம் சட்டைசெய்யவில்லை.' எந்த ராணுவத்தையும் ஒரு கைபார்த்துவிடுவோம் 'என்று அருண்ஜெட்லி நேற்று பதிலடிகொடுத்திருந்தார்.
இந்நிலையில், டோக்லாவிலிருந்து சீனத் துருப்புகள் 100 மீட்டர் தூரத்துக்குப் பின்வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டோக்லா விவகாரத்தை சுமூகமாக முடிக்க சீனா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. எனினும் சீனத் துருப்புகள் 250 மீட்டர் பின்வாங்கிச் செல்ல வேண்டுமென இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போதையை சூழலில், இரு நாடுகளுமே போரில் ஈடுபடுவது சாத்தியமில்லாத விஷயம். சுற்றிலும் பகைவர்களை வைத்துக்கொண்டு சீனா இந்தியாவுடன் நிச்சயமாக போரில் ஈடுபட முடியாது. சீனா அளிக்கும் ஆதரவால்தான் வட கொரியா துள்ளிக்கொண்டிருக்கிறது. வட கொரியாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
ரஷ்யா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற பிற வல்லரசுகளின் ஆதரவும் நிச்சயமாக சீனாவுக்குக் கிடைக்காது. தென் சீனக் கடலில் வூடி தீவையும் உரிமைகொண்டாடி, சீனா சர்ச்சையில் ஈடுபடுகிறது. தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தால் பிலிப்பைன்ஸ், ஜப்பான், மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. போதாக்குறைக்கு தைவான் நாட்டையும் உரிமை கொண்டாடுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவுடன் சீனா போரிடுவது எந்த விதத்தில் சாத்தியம்?
சீனாவுக்கு எதிராக இந்தியா எடுத்த உறுதியான, துணிவுமிக்க நடவடிக்கையாக சர்வதேச நாடுகள் டோக்லா விவகாரத்தைப் பார்க்கின்றன.

No comments