யாழில் பொலிஸாரின் நடவடிக்கை: யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு விசனம்
யாழில் பொலிஸாரின் நடவடிக்கை: யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு விசனம்
இதனால் யுத்தக்காலத்தைப் போல் யாழ் குடாநாட்டில் வாழும் மக்கள் மீண்டும் அச்சமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
யாழ் குடாநாட்டில் அண்மைய நாட்களாக தீவிரமடைந்துள்ள வாள்வெட்டு துப்பாக்கிச் சூடு மற்றும் ஏனைய குற்றச்செயல்களைக் காரணம் காட்டியே விசேட அதிரடிப்படையினரும், பொலிசாரும் நாளாந்தம் கைதுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இளைஞர்களை தொடர்ச்சியாக கைதுசெய்வது மாத்திரமன்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவதாகவும், புகைப்படம் எடுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இவ்வாறான சூழலில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் 6 ஆம் கட்டைப் பகுதியில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி மாலை 4 மணியளவில் மணல் ஏற்றி சென்ற துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என்ற இளைஞர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான பொலிசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் தற்போது பொலிசாரால் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய இதுவரை பெண் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கோகிலன் என்றழைக்கப்படும் 17 வயதுடைய சிவஞானம் சிலைக்சன் என்ற இளைஞர் வேம்படி சந்தியில் வைத்து நெல்லியடி பொலிஸாரால் 3 திகதி உள்ளூர் நேரப்படி 11 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சிவஞானம் சிலைக்சன் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மோசமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அவரது உறவினர்கள் ஐ,பி.சி தமிழ் செய்திக்கு தெரிவித்தனர்.
சிவஞானம் சிலைக்சன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக அறிந்த அவரது தாயார் மற்றும் சகோதரி நேரடியாக நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தடுத்து வைக்கப்பட்டிருந்த கோகிலன் தொடர்பில் வினவியுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோகிலனின் தாய் மற்றும் சகோதரியை விரட்டியடித்துள்ளதுடன், வீதிகளிலும் துரத்தியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி குடும்பத்தார் முன்னிலையில் சிவஞானம் சிலைக்சனைதாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான சூழலில் வடமராட்சி பகுதியில் இளைஞர்களை குறிவைத்து இடம்பெறும் கைதுகளை தடுக்காவிடில் அவை பாரிய மோதல்களை ஏற்படுத்தும் எனவும் இந்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
இந்த நிலையில் யாழ் குடாநாட்டில் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை காரணமாகக் கூறி மீண்டும் இராணுவம் உட்பட முப்படையினரை பொலிசாரின் கடமைகளுக்கு அழைத்துள்ளமை நிலமையை மேலும் மோசமடையச் செய்யும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி எச்சரித்துள்ளது.
அது மாத்திரமன்றி யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களுடன் தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறுவதன் ஊடாக அரசாங்கம் பாரிய சதித் திட்டமொன்றுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் நீக்கினாலும் ஐரோப்பிய ஒன்றியம் அந்த தடையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்பதற்காக யாழ் குடாநாட்டில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நேரடியாக தொடர்புபடுத்தி வருவதாகவும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில் யாழ் குடா நாட்டில் தொடரும் பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.வி.பீ மங்களராஜா, யாழ் குடாநாட்டில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை காரணம் காட்டி விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரை நடமாட விடுவது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கின்றார்.
அத்துடன், யுத்தம் மௌனித்த பின்னர் யாழ் குடா நாட்டில் உள்ள தமிழ் மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் ஸ்ரீலங்கா அரச படையினரால் திட்டமிட்டு வன்முறை கும்பல்கள் உருவாக்கப்பட்டு கடடவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை எஸ்.வி.பீ மங்களராஜா குற்றஞ்சாட்டுகின்றார்.
யாழ்ப்பாணத்திற்கு அவசரமாக விஜயம் செய்திருந்த ஸ்ரீலங்கா பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்த யாழ் குடாநாட்டில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பிருப்பதாக பகிரங்கமாக தகவல் வெளியிட்டிருந்ததார்.
ஸ்ரீலங்கா பொலிஸ் மா அதிபரின் இந்த பகிரங்க அறிவிப்புக்குப் பின்னால் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை முன்வைக்காது தொடர்ந்தும் அவர்களை அச்சுறுத்தி பீதிக்குள் வைத்திருப்பதற்கு தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான அரசாங்கமும் திட்டமிட்டுள்ளதாக தமிழர் தரப்பினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

No comments