திருடிய மக்கள் பணத்தை மீண்டும் அறவிடுவதற்கு விரைவில் நடவடிக்கை
மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல்வாங்கல் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலும் பாரிய ஊழல் மோசடி, அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகளையும் உரியமுறையில் நடைமுறைப்படுத்தி திருடர்களுக்கு தண்டனை வழங்கவும் திருடப்பட்ட மக்கள் பணத்தை மீண்டும் அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இதற்குத் தேவையான அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை தான் இன்று ஆரம்பித்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப அந்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து மக்களுக்கு நீதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நேற்று (17) பிற்பகல் எல்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடியான மத்திய வங்கி மோசடி குறித்து கண்டறிவதற்கு தான் நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பக்கசார்பின்றி சுயாதீனமாகவும் நேர்மையாகவும் நீதிமன்றம் மற்றும் சட்ட ஆட்சியை மதித்து செயற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரசியல் விரோதிகள் எதனைக் கூறியபோதும் இந்த ஆணைக்குழு இந்நாட்டில் இதுவரையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் மிகவும் தூய்மையாகவும் வெற்றிகரமாகவும் செயற்பட்ட ஆணைக்குழுவாகும் எனக் குறிப்பிட்டார்.
இந்த ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு மூன்று புதிய சட்டங்களை ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மீண்டும் மத்திய வங்கியில் அத்தகைய ஊழல், மோசடி நடைபெறாதிருப்பதை உறுதி செய்தல், தேவையான புதிய சட்டங்களை ஆக்குதல், களவாடப்பட்ட மக்கள் பணத்தை உடனடியாக மீண்டும் பெற்றுக்கொள்ளுதல், தேவையான சட்டத்தை ஆக்குதல், எதிர்காலத்தில் மத்திய வங்கியில் இத்தகைய மோசடிகள் இடம்பொறாத வகையில் நிறுவனத்தை அமைப்பதற்கான சட்டதிட்டங்களுடன் இலஞ்சம், ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவில் மீண்டும் விசாரணையின்றி இந்த அறிக்கையில் உள்ளக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாக கொண்டு குறித்த நபர்களுக்கெதிராக வழக்குத் தொடுப்பதற்கு இலஞ்சம், ஊழல், மோசடி விசாரணை சட்டத்தை திருத்துதல் போன்ற வி்டயங்கள் இதில் உள்ளக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலஞ்சம், ஊழல், மோசடி விசாரணை சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தான் உறுப்பினர்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மக்களின் பணத்தை திருடுதல், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல், மக்களுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்துதல், தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற பாவ காரியங்களின் விளைவுகளை விளக்கியதுடன், அவற்றிலிருந்து விலகி முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் 10ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலில் அனைவரிடமும் எதிர்பார்ப்பதும் அத்தகைய தூய ஆட்சியேயாகும் என்றும் குறிப்பிட்டார்.
இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அபேட்சகர்களி்ன் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு தொடரில் மற்றுமொரு மக்கள் சந்திப்பு பெரும் எண்ணிக்கையான மக்கள் பங்குபற்றுதலுடன் எல்பிடியவில் நேற்று இடம்பெற்றது.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, சந்திம வீரக்கொடி, இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, தென்மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, நிசாந்த முதுஹெட்டிகம, மனுச நாணயக்கார, வீரக்குமார திஸாநாயக்க, பியசேன விஜயநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments