மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அச்சத்தில் பாண்டிச்சேரி மற்றும் சென்னை.
இந்தியாவின் அபாய நகரங்கள் பட்டியலில் பாண்டிச்சேரி மாநிலத்தை குறிப்பிட்டுள்ளது மத்திய நிலநடுக்கவியல் மையம். இதனால், 'பாண்டிச்சேரியில் ஏற்படும் கடுமையான இயற்கைச் சீற்றத்தால், சென்னையும் பெரிதளவு பாதிக்கும்' என்கின்றனர் சூழல் ஆய்வாளர்கள்.
தேசிய நிலநடுக்கவியல் மையம், அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'இந்தியாவில் 29 நகரங்கள் அபாய பட்டியலில் இருக்கின்றன. இந்த நகரங்கள் அனைத்தும் 'கடுமையான நிலநடுக்க அதிர்வு' என்ற எல்லையைத் தாண்டி, 'மிகவும் கடுமையான நிலநடுக்க அதிர்வு' என்ற ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், டெல்லி, பாட்னா, ஸ்ரீநகர், பாண்டிச்சேரி, சிம்லா, இம்பால் உள்ளிட்ட முக்கியத் தலைநகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், பாண்டிச்சேரி மாநிலத்தில் மிகவும் கடுமையான நிலநடுக்க அபாயம் ஏற்பட்டால், கல்பாக்கம் அணுஉலைக்கு ஏற்படக் கூடிய ஆபத்தையும் சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
கடந்த 2001-ம் ஆண்டில் அபாயப் பகுதி 2-ல் இருந்த புதுச்சேரி இந்தாண்டு அபாய நகரம் பகுதி 4-க்கு முன்னேறி உள்ளது. அபாயப் பகுதி 2 ஆக இருந்தபோது, அதற்கேற்ற பாதுகாப்பு வசதிகளோடு கல்பாக்கம் அணுமின் நிலையம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அபாயப் பகுதி நான்காக உயர்ந்த பிறகு, அதற்கேற்ப பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நிலநடுக்க பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ள பகுதியில் கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ளதே, தற்போது பெரும் பிரச்னையாகத் தலைதூக்கியுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி ஏதேனும் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டால் அது கல்பாக்கம் அணுமின் நிலையம் மட்டுமின்றி, 80 கி.மீ. சுற்றளவுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் சென்னையிலும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த விபத்து நிகழ்ந்தால் "புகுஷிமா அணு உலை விபத்து எந்தளவுக்கான தாக்கம் ஏற்படுத்தியதோ அதே அளவிலான தாக்கத்தை நாமும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்" என்கிறார்கள்.

No comments