மீன ராசிக்கான 02.09.2017 முதல் 02.10.2018 வரை குருப்பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்

எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே!

குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன்களால் கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வழக்குகள் சுமுகமாகும்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான்  தனது 5-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் தனது 7-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  குரு பகவான் தனது 9-ம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். 

குரு பகவானின் சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 2, 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் பயணிப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்லபடி முடியும். தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். உங்களின் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வங்கிக் கடன் கிடைக்கும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்  நல்லவிதத்தில் முடியும். 

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் அரசாங்க விஷயம் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். 

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர் கள். புதிய வீட்டுக்கு மாறுவீர்கள். 

வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். மாணவர்களே! முதலில் இருந்தே பாடங்களை கவனமாகப் படிப்பது அவசியம். உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்ளப் பாருங்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

 இந்த குரு மாற்றம் கடின உழைப்பு, குறைந்த வருமானம் என ஒருபக்கம் அலைக்கழித்தாலும், சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: 

மகம் நட்சத்திர நாளில், உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ர புரீஸ்வரரையும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணா மூர்த்தியையும் வணங்குங்கள்; வாழ்வில் சாதிப்பீர்கள்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.