இராணுவத்தினரை யாழ்ப்பாணக் கோட்டைக்கு மாற்றுவது சரியான தேர்வாக அமையும் : ஆளுநர் கூரே

யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்ப்பாணக் கோட்டைக்கு மாற்றுவது சரியான தேர்வாக அமையும் என்றும் அப்பொழுதுதான் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.


வவுனியா மாவட்டத்தில் உள்ள விகாராதிபதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “யாழ்ப்பாணத்திலுள்ள சிங்கள மகா வித்தியாலயம் தற்போது இராணுவ முகாமாக உள்ளது. அதனை விடுவித்து மீண்டும் பாடசாலை ஒன்றை ஆரம்பித்துக் கொடுக்குமாறு நான் ஜனாதிபதியிடம் கூறியுள்ளேன். அதற்கேற்ற இடமாக யாழ்ப்பாணக் கோட்டை உள்ளது. இந்த கோட்டையில் 45 ஏக்கர் காணி இருக்கின்றது.
யாழ்ப்பாண நகரத்திற்கு மத்தியில் உள்ளமையினால் அதனை கோட்டை என்று கூறுகின்றார்கள். அங்கே டச்சு நாட்டவர்களும் ஆங்கிலேயர்களும் இருந்தனர், அதேபோல எங்கள் இராணுவத்தினரும் அங்கு இருந்தனர். ஆனாலும் தற்போது இராணுவத்தினர் அந்தக் கோட்டையில் இருந்து வெளியேறியமையினால் கோட்டை வெறுமையாக தான் உள்ளது.
சில இடங்களில் பொது மக்களின் காணிகளில் இராணுவத்தினர் உள்ளனர். அவர்களை மீண்டும் அதே கோட்டை நோக்கி நகர்த்தினால் தமிழ் மக்களின் காணிகளை இலகுவாக விடுவிக்க முடியும். அதன்படி எமது சட்டரீதியான உரிமையைப் பயன்படுத்தி இராணுவத்தினர் அங்கு செல்வதுதான் நியாயமாகும். இத்தகைய யோசனை சனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.