கிழக்குப்பல்கலைக்கழகத்தினை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்தாய்வுக் கூட்ட விபரம் இதோ
கிழக்கு பல்கலைகழக மாணவர்களிற்கு....
மாணவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து கிழக்குப்பல்கலைக்கழகத்தினை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நேற்றையதினம் திங்கட்கிழமை காலை கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
பல்கலைக்ழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கடந்த 8ஆம் திகதி முதல் கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக்கட்டமான செனற்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்களது பிரச்சினைகள் குறித்தும் பல்கலைக்கழகத்தினை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிமுதல் 12 மணிவரையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்கலைக்ழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர், மற்றும் உறுப்பினர்கள், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கம், பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன், பீடாதிபதிகள், திருமலை வளாகத்தின் பணிப்பாளர், கல்லடியிலுள்ள சுவாமி விபுலாந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப்பணிப்பாளர், பேரவை உறுப்பினர்கள் 3 பேர் தவிர்ந்த ஏனையவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த வார இறுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டம் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.
இதன்போது மாணவர்களது விடுதிப்பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களது மேல் முறையீடுகளை விசாரணை செய்தல், மூடப்பட்டிருக்கும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல், ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருதல் தொடர்பில் நடத்தப்பட்ட பேரவை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் குறித்து கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் ஜொபர் சாதிக் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையில் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவு பெறவில்லை. எதிர்வரும் வியாழக்கிழமைக்குப்பின்னரே இது தொடர்பான முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாணவர்களது பிரச்சினை காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டத்தில் குதித்து பகிஸ்கரிப்பில் ஈடுபட்டது. அதன் பின்னர், கிழக்குப்பல்கலைக்கழகம் காலவரையற்று மூடப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னால் கூடாரம் அமைத்து யூலை மாதத்தில் போராட்டத்தினை ஆரம்பித்திருந்த மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் 08ஆம் திகதி மதிய வேளை சீசிரீவி கமராவை அகற்றவேண்டும், விடுதி வசதி வழங்கப்படவேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளுடன் மாணவர்கள் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இன்று வரைக்கும் அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.
8ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக காவலாளிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 11 ஆமு; திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டு மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டதுடன் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் வெளியேறவில்லை. 14ஆம் திகதி நீதிமன்றத்தில் மாணவர்கள் ஆஜராகினர். மறுநாள் (15) உபவேந்தர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு மீண்டும் 16ஆம் திகதியும் விசாரணைகள் நடைபெற்றிருந்தன. பின்னர் 30ஆம் திகதி வரையில் வழக்கை ஒத்திவைத்த நீதிபதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இப்பிரச்சினை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தார்.
இருப்பினும் சரியான முறையில் அந்த அறிக்கை அமையவில்லை என்ற காரணத்தினால் அந்த வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஏறாவூர் நீதவான் ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றைய கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதாக இருந்தாலும் இன்னமும் ஒரு மாத காலம் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments