பிள்ளைகளுக்கு உணவு தராமல், அழுக்கான அறையில் அடைத்து கொடுமைப்படுத்திய பெற்றோர்
ஐந்து பிள்ளைகளை அழுக்கான அறையில் சிறைவைத்து கெட்டு போன உணவுகளை கொடுத்து கொடுமைப்படுத்திய பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் குயாபா நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டின் அறையில் 6-லிருந்து 14 வயதுடைய மூன்று சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் தங்கள் பெற்றோரால் அடைத்து வைக்கப்பட்டனர்
சிறார்கள் தங்கியிருந்த அறையில் தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் இலலை எங்கு பார்த்தாலும் குப்பையும், அழுக்குமாக இருந்துள்ளது.
நடுநடுவில் அவர்களின் தந்தை ஹிலியோ மற்றும் தாய் சாண்ட்டோஸும் கெட்டு போன உணவுகளை மட்டும் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்துள்ளனர்.
அதை சாப்பிட முடியாமல் தவித்த சிறுவர்கள் ஒரு கடிதத்தில் நாங்கள் அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளோம், எங்களுக்கு தாகமாகவும் பசியாகவும் உள்ளது என எழுதி ஜன்னல் வழியாக தூக்கி போட்டுள்ளனர்.
கடிதத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு இது குறித்து தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு அவர்கள் வந்த போது ஹிலியோவும், சாண்ட்டோஸும் வீட்டு வாசலில் மாமிசம் சாப்பிட்டபடி இருந்துள்ளனர்.
இதையடுத்து ஐந்து பேரையும் மீட்ட பொலிசார் அவர்களின் பெற்றோரை கைது செய்துள்ளனர்.
சிறார்கள் எத்தனை நாட்களாக அறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
அவர்களின் உடலில் காயங்கள் மற்றும் வெட்டுக்கள் இருந்த நிலையில் பெற்றோர்கள் கொடுமைப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சிறார்கள் சரியாக சாப்பிடாமல் இருந்ததால் ஊட்டசத்து குறைபாடு காரணமாக மிகவும் சோர்வாக இருந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
