திடீரென உயர்ந்த மசகு எண்ணெய் விலை ; இலங்கை வெளியிட்ட தகவல்

 தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.



இதற்கிடையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு மத்தியில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் உறுதியற்ற தன்மையைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியாக எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.

அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழியாக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

அந்த சூழ்நிலையுடன் ஏற்பட்ட உறுதியற்ற தன்மை காரணமாக இன்று உலகளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. அதன்படி, 3 சதவீத விலை அதிகரிப்புடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 79 டொலராக பதிவாகியுள்ளது.

இதனால், எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். உலகின் எரிபொருள் போக்குவரத்தில் சுமார் 20 வீதம் நடைபெறும் பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேச பெருங்கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உலகின் எண்ணெய் போக்குவரத்தில் 1/6 பங்கு நேரடியாக ஹார்முஸ் நீரிணை வழியாக செல்கிறது, மேலும் தினமும் 17.2 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் அதன் வழியாக பல நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் நெருக்கடியின் தாக்கம் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாரம்பரிய விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் ஏற்பட்டால், ஒரு தீர்வாக, நைஜீரியா உட்பட பல நாடுகளில் எண்ணெய் மாதிரிகளை பரிசோதிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, இந்த சூழ்நிலையின் சாத்தியமான அனைத்து தாக்கங்கள் குறித்தும் அரசாங்கம்உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.