இந்து முறைப்படி தம்பதியர் அக்கினியை ஏழு முறை வலம்வருவது ஏன் ?



திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டிய பின்பு அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பது நம்முடைய முன்னோர்கள் காலம் முதல் இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் சாஸ்திர சம்பிரதாயமாகும். சமஸ்கிருதத்தில் இதை 'சப்தபதி" என்று கூறுவார்கள்.அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்குத் துணையிருப்பான் என்று தன்னுடைய பிரார்த்தனையைச் சொல்கிறான்!

♥முதல் அடியில் : பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
♥இரண்டாம் அடியில் : ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
♥மூன்றாம் அடியில் : நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
♥நான்காவது அடியில் : சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
♥ஐந்தாவது அடியில் : லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.
♥ஆறாவது அடியில் : நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
♥ஏழாவது அடியில் : தர்மங்கள் நிலைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாக சொல்லப்படுகிறது.

 இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூட்சமமான மனோவியல் விடயத்தை சாஸ்திரத்தில் உணர்த்தி உள்ளார்கள் நம்முடைய முன்னோர்கள்.இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டி சென்று விடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் இருவரும் ஒன்றாக நடக்க மாட்டோம்.
 இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூட்சமமான விஷயம் ஆகும். இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து 'நம் தர்மத்தில்" அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும் மனோவியல் விஷயங்கள் நிறைந்தது தான் தர்மம் ஆகும்.
 எனவே, நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தையும் பின்பற்றி பேணி காத்து நலமுடன் வாழ்வோம்.

Theme images by mammuth. Powered by Blogger.