இலங்கையில் மூன்று பிள்ளைகளின் கைகளையும் பின்புறமாக கட்டி தூக்கிலிட்டு கொலை செய்த தந்தை…
மாத்தறை கம்புறுபிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது பிள்ளைகள் மூவரை தூக்கிலிட்டு கொலை செய்ததன் பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரலிஅத்துர பிரதேசத்தில் வீடொன்று தீப்பற்றி எரிவதாக கம்பறுபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய நேற்றுமுன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றிருந்தபோது அவ் வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோது தீக்கிரையான வீட்டுக்கு முன்பாக அமைந்திருந்த இரண்டு மரங்களுக்கு குறுக்காக இடப்பட்டிருந்த மூங்கில் தடியொன்றில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்ட தந்தை, அவரது மகன், மகள்மார் இருவர் உட்பட நால்வரின் சடலத்தை பொலிஸார் கண்டு பிடித்தனர்.
சந்தேக நபரான தந்தை தனது பிள்ளைகள் மூவரின் கைகளை பின்புறமாக பிணைத்து கட்டியதன் பின்னர் அவர்களை தூக்கிலிட்டதோடு வீட்டையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளதாக சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் பதிரண பிரியந்த (44) என்ற தந்தை, மகள்களான 16 வயதான கௌசல்யா செவ்வந்தி, 10 வயதான ஹிருணி செவ்வந்திகா மற்றும் மகனான 14 வயதான இளம் பிக்கு என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டுக்கு வந்திருந்த குறித்த பிக்கு இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மற்றும் தந்தை ஆகியோரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் காரணமாக அப்பிள்ளைகளின் தாய் சுமார் 1 மாதத்துக்கு முன்னர் தனது பிள்ளைகள் மற்றும் கணவரைப் பிரிந்து சென் றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சடலங்கள் மீதான நீதிவான் மற்றும் மரண பரிசோதனைகள் இடம்பெறவுள்ள அதேவேளை கம்புறுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
