புதிய அரசியலமைப்பு விடயத்தில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது - டக்ளஸ்
புதிய அரசியலமைப்பு விடயத்தில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
புதிய அரசியலமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் மூலம் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகின்றீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது....
தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது. அதற்கான வரைபை தயாரிக்கும் வழி நடத்தல் குழுவில் நானும் உறுப்பினராக இருக்கின்றேன்.
இம்முயற்சியானது வெற்றிபெற்றால் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை முன் வைக்கும் என்று நம்புகின்றேன்.
ஆனாலும் இம்முயற்சியானது பல தடைகளைத் தாண்டவேண்டியுள்ளது. ஆகவே புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தும் இம்முயற்சி வெற்றியளிக்குமா? என்பதை தற்போதைக்கு உறுதியாகக் கூறமுடியாது.
புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருதற்கான பிரதமரின் முயற்சிகள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றது. எனினும் இம்முயற்சி எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலேயே நடைமுறைக்கு வரும் சாத்தியமுள்ளது.
நாம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் முயற்சி வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகின்றோம். அதேநேரத்தில் பெரும்பான்மை மக்களை எதிர்நிலைக்குத் தள்ளிவிடாமல் பக்குவமாக விடயங்களைக் கையாள வேண்டிய பங்களிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் அநாவசியமான சந்தேகங்களையும், அச்சங்களையும் உருவாக்காத வண்ணம் நடந்து கொள்வதிலேயே புதிய அரசியலமைப்பின் வெற்றி தங்கியுள்ளது.
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு எவ்விதமான தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளது என்ற தெளிவை தமிழ்மக்களுக்கு கூட்டமைப்பினர் வழங்கவில்லை.
தமிழ்மக்களிடம் ஒன்றையும். தென் இலங்கையில் வேறொன்றையும் கூறும் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும், வார்த்தை ஜாலங்களும் சிங்கள மக்களிடம் மட்டுமல்லாது தமிழ்மக்களிடமும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவும் குறிப்பிட்டிருந்தார்
