பல மோசடி இரகசியங்கள் மிக விரைவில் : ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
தற்போதைய வெளிவிவகார அமைச்சரும், முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தொடர்பான நெருக்கடிக்கு நாட்டின் நன்மை கருதி மிக விரைவில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என நல்லாட்சி அரசின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.
மத்திய வங்கியின் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணைகளில் நல்லாட்சி மட்டுமல்ல, ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான தகவல்களும் அம்பலமாக ஆரம்பித்திருப்பதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நேற்றையதினம் காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அரசியல் களத்தில் சூடுபிடித்திருக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்க விவகாரம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் தீர்மான மொன்று எடுக்கப்படவுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மகிந்த அமரவீர இது தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மிகவிரைவாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காண ப்படும். அத்துடன் மத்திய வங்கி மோசடி தொடர்பாகவே விசாரணை நடத்தப்படுகின்ற நிலையில் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்தும் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. முன்னாள் ஆளுநர் அஜித் கப்ராலின் சகோதரியின் விட யமும் அம்பலமாக ஆரம்பித்துள்ளது.
எனவே கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் இடம் பெற்ற மோசடி தொடர்பான விடயங்களும் வெளிவரும். இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்த போது பிரச்சினைகளை மூடிமறைக்கவும், இதனால் எந்த பிரயோஜனமும் இருக்காது என்றே சில அரசியல்வாதிகள் கூறினர்.
இன்று அப்படியல்ல. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுத்தமான அரசியலை செய்வதற்காக ஜனாதிபதி நடவடிக்கையை மேற்கொண்டார். எனவே பல இரகசியங்கள் விரைவில் வெளிவரும். இது நாட்டிற்கே நன்மையான விடயம் என்றார் அமைச்சர் மகிந்த அமரவீர.

No comments