மீண்டும் நேற்றிரவு வவுனியாவில் வாள்வீச்சு தாக்குதல், குடும்பஸ்தர் படுகாயம்

வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் நேற்றிரவு வாள்களுடன் வந்த குழுவொன்று வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு 11மணியளவில் குருமன்காடு காளிகோவில் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் முற்றாக சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
வீட்டு உரிமையாளரான கண்ணா என்பவரை கண்மூடித்தனமாக வாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன் குறித்த சம்பவத்தை மேற்கொண்டவர்கள் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த குழு என்று அறியப்படுகிறது. குடும்ப தகராறு ஒன்றுக்காக பழிவாங்கும் நோக்கத்துடன் கூலிப்படைபோல் செயற்படும் குழு ஒன்றை வைத்தே வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை அண்மையில் வவுனியா தேக்கவத்தை பகுதியில் ஆவா குழு என சந்தேகத்தில் வாளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கும் இந்த குழுவினருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரியவருகின்றது.இவ் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.