யாழ். வாள் வெட்டு! பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர்களின் பெயர் விபரங்கள் வெளியீடு
யாழில் இரு பொலிஸ் அதிகாரிகளை வாளால் வெட்டிய சம்பவத்தில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்த இருவரும் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதில் நேரடியாக தொடர்புபட்ட பிரதான சூத்திரதாரியாக “நிஷா விக்டர் என்று அழைக்கப்படும் சத்தியவேல் நாதன்” என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் யாழ்ப்பாணத்திலும், பிரதான சூத்திரதாரி நிஷா விக்டர் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறக்கோட்டையிலும் வைத்து நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் மட்டக்குளியில் வைத்து நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புறக்கோட்டையில் கைதானவர்களின் விபரம்
பிரதான சூத்திரதாரி நிஷா விக்டர் என்று அழைக்கப்படும் சத்தியவேல் நாதன்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட வினோத் என்று அழைக்கப்படும் ராஜ்குமார் ஜெயக்குமார்.
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த மனோஜ் என்று அழைக்கப்படும் குலேந்திரன் மனோஜித்.
இவர்கள் நேற்று காலை புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டவர்களாவர்.
மட்டக்குளியில் கைதானவரின் விபரம்
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் போல் என்பவர்.
யாழ்ப்பாணத்தில் கைதானவர்களின் விபரம்
இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிகாந்தன் குகதாஸ் என்பவரும் மேலும் ஒருவருடைய பெயர் வெளியிடப்படவில்லை.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருந்த நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments