யாழ்ப்பாணத்தில் சிக்கிய 10,100 போலி கனடிய டொலர்கள்! - இருவர் கைது!!!.
போலியான 10, 100 கனடிய டொலர்களை மாற்ற முற்பட்ட இரண்டு பேர், யாழ்ப்பாணத்தில் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ். நகரில் உள்ள சாரங்கா நாணயமாற்று நிலையத்திற்குச் சென்ற இளைஞன் ஒருவர் போலியான 10,100 கனடிய டொலர்களை மாற்ற முயன்றார். நாணயமாற்று நிலையத்தில் இருந்தவர்கள், அந்த கனடிய டொலர்கள் அனைத்தும் போலி என்று கண்டறிந்ததை தொடர்ந்து யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற புலனாய்வுப் பிரிவினர், நாணயம் மாற்றுவதற்கு வந்த இளைஞனை கைதுசெய்ததுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சித்தங்கேணிப் பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் போலி நாணயங்களை மாற்றிக்கொண்டு வருமாறு தந்ததாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சித்தங்கேணிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரும் போலி நாணயங்களை மாற்ற வந்த நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இவை சந்தேகநபர்களால் அச்சிடப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.
விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றதுடன், 10,100 கனேடியன் டொலரும் இலங்கை ரூபாவின் மதிப்பின் பிரகாரம் சுமார் 13.5 இலட்சம் ரூபா என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments