நாளை எச்சரிக்கை : பரீட்சார்த்திகளை கைது செய்ய நடவடிக்கை : பணிப்பாளர் நாயகம் புஷ்பகுமார
இவ்வருடத்துக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை (04) நிறைவடையவுள்ளதாகவும், அன்றைய தினம் அசாதாரண செயற்பாடுகளின் ஈடுபடும் பரீட்சார்த்திகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு நாளைய தினம் முரண்பாடான நடவடிக்கைகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை ரத்து செய்வதற்கும் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர், பரீட்சை மத்திய நிலைய பகுதிகளில் தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறும் மாணவர்களை திணைக்களம் கோரியுள்ளது.
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து பரீட்சை மத்திய நிலைய கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments