பிரதமர் மோடிக்கு எச்சரிக்கைக் கடிதம் : அச்சத்தில் இந்தியா
ஆசிய நாடுகளின் கடல் எல்லைகளையே மாற்றும் அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் ஏற்படப் போவதாக கேரளாவைச் சேர்ந்த பாபு கலயில் என்பவர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாபு கலயில்அந்த கடிதத்தில், ’ இந்தியப் பெருங்கடலில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஒன்று ஏற்படப் போகிறது. வலிமையான அந்த நிலநடுக்கத்தால் ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
இதனால் கடல் எல்லைகளே மாறும். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள் வரை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதனால் கடலில் மணிக்கு 120 கி.மீ. முதல் 180 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கனமழையும் பெய்யக்கூடும். மேலும், சுனாமி அலைகளும் ஏற்படக் கூடும்' என்று அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இ.எஸ்.பி சக்தி மூலம் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாபு தெரிவித்துள்ளதாவது,
எனக்கு உள்ள இ.எஸ்.பி. சக்தியைக் கொண்டு எதிர்காலத்தில் நடைபெறும் சம்பவங்களைச் சரியாகக் கணிக்க முடியும்.
கடந்த 2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியை 2 வாரங்களுக்கு முன்பாகவே சரியாகக் கணித்திருந்தேன்.
அதேபோல, வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படப் போவதாக உள்ளுணர்வு கூறியுள்ளது.
எனவே, அதுகுறித்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும், நிலநடுக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள மக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே ஃபேஸ்புக்கில் இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டேன்.
மாறாக மக்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்த தகவலை வெளியிடவில்லை' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
இந்தியப் பெருங்கடல் மையம் சார்பாக கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்ற தேசிய மாநாட்டில், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவியியல் அழுத்தம் காரணமாக, தென் இந்தியாவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments