மேன் முறையீடு செய்யவுள்ள மரணதண்டனை பெற்ற குற்றவாளிகள்
மாணவி வித்தியாவை தாம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யவில்லை எனவும் அவரைக் கொன்றவர் வேறு ஒருவரே எனவும் தெரிவித்து, மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனை அளிக்கப்பட்ட எழுவரும் மேன்முறையீடு செய்யவுள்ளனர்.
அடுத்துவரும் 12 நாட்களுக்குள் இந்த மேன் முறையீடு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது. வித்தியா படுகொலை குற்றத்தை புரிந்தவர்கள் வேறு யாரோ என தெரிவித்த குற்றவாளிகள் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன, இது தொடர்பிலான மேன் முறையீட்டை 14 நாட்கள் கால அவகாசத்துக்குள் மிக விரைவில் தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் வித்தியா கொலையுடன் தொடர்புபடவில்லை என தெரிவிக்கும் சிரேஷ்ட சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன, குறித்த கொலை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கை இட்ட விதம் தொடர்பிலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனிடையே வித்தியா கொலை தொடர்பில் மரண தண்டனை அளிக்கப்பட்டவர்கள் தாமாக மேன் முறையீடு செய்யாவிடத்தும், 14 நாட்களுக்குள் சிறைச்சாலை ஊடாக அவர்கள் சார்பில் மேன் முறையீடு செய்யப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டினார்.
மரண தண்டனை விதிக்கப்படும் எந்தவொரு கைதி தொடர்பிலும் சிறைச்சாலை இந்த நடைமுறையையே பின்பற்றுவதாகவும், அதன்படியே வித்தியா கொலை தொடர்பிலும் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் மேன்முறையீடு செய்யாதவிடத்து, சிறைச்சாலை ஊடாக மேன்முறையீடு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

No comments