3,900 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் பகிரங்கமாக எரித்து அழிக்குமாறு உத்தரவு - மைத்திரி
பொலிஸ் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு நீண்டகாலமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் 3,900 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருட்களை பகிரங்கமாக எரித்து அழிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 982 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1,028 கிலோகிராம் கொக்கேய்ன் இவ்வாறு அழிக்கப்படவுள்ளது.
தொகையாக கைப்பற்றப்படும் ஹெரோயின் மற்றும் ஏனைய போதைப்பொருட்கள் நீதிமன்ற களஞ்சியங்கள், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவற்றில் களஞ்சியப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக அவற்றை அழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.
வழக்கு விசாரணைகளுக்கு தேவையான அளவு போதைப்பொருட்களை வைத்துக்கொண்டு ஏனையவற்றை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் போதைப்பொருட்களை எரித்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments