யாழில் இரவு நேரங்களில் வீதியில் கூடுவோருக்கு விரைவில் ஆப்பு!!



யாழ்மாவட்டத்தில், இரவு நேரங்களில் அவசியமற்ற முறையில் அல்லது சட்டவிரோதமான முறையில் நடமாடும் இளைஞர்களை தயவு தாட்சண்யம் இன்றி கைதுசெய்யவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் பல முறை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதும் காத்திரமான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்து தரப்பினராலும் பொதுமக்கள் மத்தியில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கடந்து சட்ட நடவடிக்கை எடுப்பது தான் மிக முக்கியம் ஆகும்.

யாழ் நகர் பகுதியில் அதிகளவான குற்றச்செயல்களில் இளையோர் ஈடுபடுகின்றனர். அவற்றை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். இரவு நேரங்களில் கும்பலாக நிற்கும் இளைஞர்களால் வீதியில் சீரான போக்குவரத்து செய்ய முடிவதில்லை.

துணிவுடன் பெண் பிள்ளைகள் நடமாட முடிவதில்லை. எனவே கூட்டமாக நிற்கும் இளைஞர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அதற்கு பொலிஸாருக்கு அனுமதி உண்டு என்ற காரணத்தினால் பொலிஸார் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியமாக உள்ளது.

இதற்கு பதிலளித்த பொலிஸார், நாம் தொடர்சியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் இந்த வருடம் செப்ரம்பர் மாதம் வரை புகைத்தல் மதுபான பாவனை தொடர்பாக 302 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிபோதையில் சாரத்தியம் மேற்கொண்டவர்கள் 56 பேரை கைது செய்துள்ளோம். அத்துடன் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக 26 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாம் இந்த விடயங்கள் தொடர்பில் கவனத்தில் நிறுத்தி செயற்படுவோம்.அதற்கு ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் ஆகும் என மேலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.இந்த கோரிக்கையானது யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.