புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவருக்கு சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுப்பதற்கு முயற்சி

இன்று காலை 9.30 இற்கு ஆரம்பமான ட்ரயல் அட்பார் மன்றத்தில் பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆஜராகி தமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.
வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் ட்ரயல் அட்பார் முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பதில் சட்டமாஅதிபர் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ட்ரயல் அட்பாருக்கு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கின் முக்கிய சூத்திரதாரி, சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாக பதிவு செய்து சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிஸில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் இதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காட்சிகளை இவர் விற்பனை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாக பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் ஒன்பது சந்தேகநகபர்களும் மாணவி வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் அவர்களே மாணவியை கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்துடன் இணைந்து காட்டுமிராண்டித்தனமான இந்தக கொடூரம் இழைக்கப்பட்டதாகவும், நாட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் இடம்பெற்றதை கூறுவதில் தமக்கு தயக்கம் இல்லை எனவும் பதில் சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார்.
வழக்கின் இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் உறவினர்கள் எனவும் அவர்கள் கூட்டாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த விடயங்களுக்கான ஆதாரம் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் இருப்பதாகவும் விசாரணைகளின்போது அவற்றை சமர்ப்பிப்பதாகவும் பதில் சட்ட மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரியொருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுப்பதற்கு முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆதாரமும் தம்மிடமுள்ளதாகவும் பதில் சட்டமா அதிபர் யாழ். மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Theme images by mammuth. Powered by Blogger.